வள்ளுவர் வர்ணிக்கிறார்…

வள்ளுவர் வர்ணிக்கிறார்…

அனிச்சப்பூ மிகவும் மென்மையனது. முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும். அவ்வளவு மென்மை. மோப்பக் குழையும் அனிச்சம் என்று சொல்கிறார் வள்ளுவர்.

அன்னத்தின் தூவி என்பது, அன்னப் பறவையின் இறகு அல்ல. இறகின் அடிப்பகுதியில் பஞ்சு போல மிகமிக மென்மையாக உரோமம்போன்று இருப்பது.

அவள் பாதம் மிகவும் மென்மையானது. எந்த அளவுக்கு மென்மையானது தெரியுமா?
அனிச்சப்பூ மீதோ, அன்னப்பறவையின் தூவி மீதோ அவள் அறியாமல் கால் வைத்துவிட்டால், அவை நெருஞ்சிமுள் போல குத்துமாம் அவளுக்கு. அந்த அளவுக்கு மென்மையான பாதங்கள்.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

என்று சொல்கிறார் திருவள்ளுவர்.

சரி இளங்கோ அடிகள் என்ன சொல்கிறார்? கண்ணகியின் பாதம் பற்றி சொல்லும்ப்போது

மண்மகள் அறிந்திலள் இவள்
வண்ணச் சீரடி

என்று சொல்கிறார். கண்ணகியின் பாதம் எப்படி இருக்கும் என்று மண்மகள் அறிந்ததில்லை என்று சொல்கிறார்.
இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

செல்வச் செழிப்பாக வளர்ந்தவள் கண்ண்ணகி. அவள் பாதம் தரையில் பட்டதில்லை. அதனால் அவள் பாதத்தை மண்மகள் அறிந்திருக்கவில்லை.

தரையில் அடிவைத்து எடுத்தவுடனே, கண்ணகியின் பாதம் கொப்பளித்துவிடுகிறது. அதனால் அவள் பாதம் மண்ணில் படவில்லை. பாதத்தில் உள்ள கொப்புளங்கள்தான் மண்ணில் படுகின்றன. எனவே, கண்ணகியின் பாதத்தை மண்மகள் அறிந்திரு்க்கவில்லை.

அடடா என்ன கற்பனை.

இதையே அம்பிகாபதி வர்ணிக்கிறான் பாருங்கள்….

காதலி அமராவதியைப் பார்த்தவுடன் அம்பிகாபதிக்கு கவிதை ஊறெடுக்கிறது. நடந்து வரும் அவள் பாதத்தின் மென்மையைச் சொல்கிறான் பாருங்கள்… இதுவரை யாரும் இப்படிச் சொன்னதில்லை. அம்பிகாபதியைத் தாண்டி யாராலும் சொல்லவும் முடியவில்லை.

அம்பிகாபதி சொல்கிறான்…

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க

தரையில் பாதம் பதிக்கிறாள் அவள். பாதம் நோகுகிறது. அடுத்த அடி வைப்பதற்காக பாதத்தை எடுக்கிறாள், பாதம் கொப்பளித்துவிடுகிறது. அவ்வளவு மென்மையான பாதங்கள்.

அடடா… என்னமா யோசிச்சிருக்கான். காதல் அவனை காவுகொண்டுவிட்டதே…

கவியரசர் கண்ணதாசனும் அவருடைய மாங்கனி குறுங்காவியத்தில் அழகாக வர்ணிப்பார்.

மேடையிலே நடனமாடுகிறாள் தலைவி. நடனம் முடிந்து பின் வாசல் வழியாக வீட்டுக்குப் புறப்படுகிறாள். அவள் அழகில் மயங்கிய தலைவன், அவளைச் சந்தித்துவிட வேண்டும் என்பதற்காக பின் வாசலுக்குப் போகிறான். அதற்குள் தலைவி போய்விடுகிறாள். எந்தப் பக்கம் போனாள் என்று தெரியவில்லை. அவளின் காலடிச் சுவட்டைத் தேடுகிறான். கிடைக்கவில்லை. ஏன் காலடிச் சுவடு தெரியவில்லை என்பதற்கு கவியரசர் காரணம் சொல்கிறார். கவிதையைப் படித்துப்பாருங்கள்..

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்
தென்றல் வந்து போனதற்கு சுவடு ஏது?
கைத்திறத்தால் தரை தடவிப் பார்த்து மெல்ல அவள்
கால்பட்ட இடத்தில் இளம் சூடு கண்டான்.

தென்றல் வந்து போனால், அது வந்துபோன சுவடு தெரியுமா என்ன? அவளும் தென்றலைப் போல மென்மையானவள். அதனால் அவள் போன காலடிச்சுவடு தெரியவில்லை. கீழே அமர்ந்து தரையைத் தடவிப் பார்க்கிறான். அவள் கால் பட்ட இடத்தில் இளம்சூடு இருப்பதைக் கண்டான் என்று சொல்கிறார் கவியரசர்.

ஆஹா..என்ன அருமையான நயம்

Comments are closed.

Chat With us
Chat with us